Showing posts with label Prophet conv. Show all posts
Showing posts with label Prophet conv. Show all posts

Monday, July 14, 2008

மக்களிடம் பொய்யுரைக்காதவர் இறைவன் விஷயத்தில் பொய்யுரைப்பாரா?

முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைத் தூதை நிரூபிக்கும் உறுதியான சான்றுகளுள் ஒன்றாக மன்னர் ஹெர்குலிசுக்கும் அபூசுஃப்யானுக்கும் இடையே நடந்த உரையாடல் அமைந்துள்ளது. அதனை இங்கு சமர்ப்பிக்கிறோம்.குறைஷிகளில் சிலர் ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டிற்குப் போயிருந்தார்கள் (குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யான் அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்தார். அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார்.அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) 'அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்' என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், 'நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்' என ஆணையிட்டார். நான் பொய் கூறினார்கள் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.புகாரி - ஹதீஸ் எண் 7 (சுருக்கப்பட்டுள்ளது)
அபூ சுஃப்யானுக்கும் ஹெர்குலிஸ் மன்னருக்கும் நடந்த உரையாடல் வருமாறு,

மன்னர் : உங்களில் அவரின் குலம் எத்தகையது?'
அபூ சுஃப்யான்: அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர்.

மன்னர் : இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?'

அபூ சுஃப்யான்: இல்லை.மன்னர்: இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா?

அபூ சுஃப்யான்: இல்லை

மன்னர் : அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?'

அபூ சுஃப்யான்: மக்களில் சாமானியர்கள் தாம்.

மன்னர்: அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?'

அபூ சுஃப்யான்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.

மன்னர் : அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?'

அபூ சுஃப்யான்: இல்லை.
மன்னர் : அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?'
அபூ சுஃப்யான்: இல்லை.மன்னர் : அவர் வாக்கு மீறியது உண்டா?அபூ சுஃப்யான்: இல்லை, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. (பின்னர் அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! என்று குறிப்பிட்டுள்ளார்.)

மன்னர் : அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?அபூ சுஃப்யான்: ஆம் மன்னர் : அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவுகள் எவ்வாறிருந்தன?அபூ சுஃப்யான்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம்.

மன்னர் : அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?அபூ சுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம்விட்டுவிடுங்கள்' என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.
மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது;'அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத்தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கிறார் என்று கூறியிருப்பேன். இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரின் முன்னோர்களில் எவரேனும் மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒருவர் இவர் என்று சொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும் வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது). அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன்.
அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாததென்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்புநெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர். நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) என்னுடைய இரண்டு பாதங்களுக்குமுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் (வெகு விரைவில்) தோன்றுவார் என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தாம் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்'.பதி நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு நாட்டின் மன்னருக்கும் ஒரு கோத்திரத் தலைவருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தைப் பறை சாற்றம் சரித்திரச் சான்றாக இன்றும் மிளிர்கிறது. இதனால் தான் கூறுகின்றோம், இதற்குப் பின்னரும் அவர்களின் தூதை மறுப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.