காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியமும் - சில குறிப்புகள்!
1. இந்தியாவை இந்துப் பேரரசாக வளர்க்க முனையும் இந்து மதவாத ஆதிக்க அரசியலை இந்துத்துவம் என்றும் மதச்சார்பின்மை பேசும் இந்தியத் தேசிய ஆதிக்க அரசியலை இந்தியம் என்றும் குறிப்பிடுகிறோம். இந்துத்துவமும் இந்தியமும் முரண்பட்டவை போல் தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றே. அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு. இந்துத்துவம் நேரடியாகவும் இந்தியம் சுற்றடியாகவும் பார்ப்பனியக் கருத்தியலைச் சார்ந்திருப்பவை. இரண்டுமே தேசிய ஒடுக்கு முறையையும் சாதிய ஒடுக்குமுறையையும் செயல்படுத்துகிறவை.
2. பாசக - ஆர்.எஸ்.எஸ் - பஜ்ரங் தளம் - இந்து முன்னணி போன்றவை இந்துத்துவ அமைப்புகளில் தலையாயவை. இந்தியத்தின் தலையாய அமைப்பு காங்கிரசாகும். இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'மதச் சார்பற்ற' எதிர்க்கட்சிகளும், இந்தியத் தேசிய இடதுசாரிக் கட்சிகளும் இவ்வகையிலானவையே.3. காசுமீரச் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதில் இந்துத்துவமும் இந்தியமும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தாலும் உண்மையில் இரண்டின் நோக்கமும் ஒன்றே என்பதை இச்சிக்கலின் வரலாறு புலப்படுத்தும்.4. இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு சிறிது காலத்துக்குக் காசுமீரம் எப்பக்கமும் சேராமல் தனித்து இருந்து வந்தது. மக்களில் பெரும்பாலார் இசுலாமியர்களாகவும் மன்னர் அரிசிங் இந்துவாக இருக்க, இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே காசுமீரை இணைத்துக் கொள்ளும் விருப்பம் இருந்தது.5. காசுமீர மக்களின் பேராதரவு பெற்ற தலைவராக விளங்கிய சேக் அப்துல்லா காசுமீரத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டும். தேவையானால் தன்னாட்சித் தகுதியுடன் இந்தியக் கூட்டாட்சிக் குடியரசில் இணைந்திருக்கலாம் என்பதே அவர் திட்டம். பாகிஸ்தானுடன் காசுமீரத்தை இணைக்கும் எண்ணம் அவருக்குத் துளியும் இல்லை.6. இந்தியாவுடன் இணைவதால் முடியாட்சியை இழக்க நேரிடும் என்பதாலும் காசுமீரத்து மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பாததாலும் அரிசிங் இந்திய இணைப்புக்குத் தயங்கிக் கொண்டிருந்த போது, பாகிஸ்தானின் ஆதரவோடு வடமேற்குப் பழங்குடிகள் காசுமீர் மீது படையெடுத்தார்கள். மிரண்டு போன அரிசிங் இந்தியாவிடம் இராணுவ உதவி கோரினார். இந்தியப் படை காசுமீரத்தில் நுழைந்தது. அப்போது நுழைந்ததுதான் இன்று வரை வெளியே வரவில்லை.7. இந்தியப் படையுதவிக்கு நிபந்தனையாக அரிசிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அத்தோடு ஓடிப் போனார். காசுமீரத்தில் இந்திய இணைப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் இந்திய அரசு ஓர் உறுதி கொடுத்தது; இந்தியாவுடன் காசுமீரத்தின் இணைப்பு இறுதியானதன்று. இந்த இணைப்பு குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு காசுமீர மக்களின் விருப்பமறிந்து அதற்கேற்ப இறுதி முடிவு எடுக்கப்படும்.8. இந்தியாவுடன் காசுமீரத்தை இணைப்பதற்கு மகாராசா அரிசிங்கை இணங்க வைப்பதில் ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பங்கு வகித்தது. துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் கேட்டுக் கொண்டபடி ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் அரிசிங்கிடம் பேசி அவரை வழிக்குக்கொண்டு வந்ததாக இன்றும் இந்துத்துவவாதிகள் பெருமைப்பட்டுக் கொள்வர்.9. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. அவரைத் தன் விருப்பம் போல் வளைத்து இந்தியாவோடு காசுமீரத்தை முழுமையாக இணைப்பது நேருவின் நோக்கம். இந்துத்துவ ஆற்றல்கள் நேரடியாகவே காசுமீரத்தை ஒடுக்கி இந்தியாவுடன் இணைக்கக் கோரின. நோக்கம் ஒன்றுதான், வழிமுறைகள் வேறுபட்டன.10. 1948 சனவரி முதல் நாள் இந்திய அரசு காசுமீரச் சிக்கலை ஐ.நா. அமைப்புக்கு எடுத்துச் சென்றது. அங்கேயும் பொதுசன வாக்கெடுப்பு நடத்தியே காசுமீரத்தின் வருங் காலத்தைத் தீர்வு செய்வதாக வாக்களித்தது.11. காசுமீர மக்களின் விருப்பத்தைப் பொறுத்து முடிவெடுப்பதாகச் சொல்லிக்கொண்டே சம்மு-காசுமீரத்தை இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் போல் ஒரு மாநிலமாக்கும் வகையில் இந்திய அரசு செயல்பட்டது. இந்திய அரசமைப்புப் பேரவையில் காசுமீரப் பேராளர்களைச் சேர்த்துக் கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காசுமீரத்துக்கென்றே உறுப்பு 370ஐச் சேர்த்தது.12. 1951 நவம்பர் 15ஆம் நாள் இந்திய அரசு சம்மு-காசுமீரத்துக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால் இந்தத் தனி அரசமைப்புச் சட்டமோ 370ஆம் உறுப்போ காசுமீர மக்களின் உரிமை வேட்கையைத் தணிக்கவில்லை. அவர்களின் எழுச்சியை மடைமாற்றும் உத்திகளாகவே இவை பயன்பட்டுள்ளன. தந்திரவுத்தியெல்லாம் வேண்டாம், நேரடியாகவே அடக்கி நசுக்கு என்பது இந்துத்துவ நிலைப்பாடு. இங்கேயும் நோக்கம் ஒன்று, வழி முறைகளில் தான் வேறுபாடு.13. இந்திய அரசின் - பண்டித நேருவின் - சூழ்ச்சித் திட்டங்களுக்கு உடந்தையாக மறுத்ததால் சேக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் சில மாதங்கள் நீங்கலாக 11 ஆண்டு காலம் அவர் சிறையிலிருந்தார்.14. காசுமீரச் சிக்கலைத் தேசிய இனச் சிக்கலாக இந்தியாவும் கருதவில்லை, பாகிஸ்தானும் கருதவில்லை. இது இரு நாடுகளிடையிலான எல்லைச் சிக்கல் அல்லது ஆட்சிப் புலச் சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் பார்வையில் இந்துத்துவமும் இந்தியமும் ஒன்றாகவே உள்ளன.15. காசுமீரத்தில் வாக்கெடுப்போ கருத்துக் கணிப்போ நடத்தாத இந்திய அரசு சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தியுள்ளது. இந்தத் தேர்தல்கள் அனைத்தும் - ஒன்றே ஒன்றைத் தவிர - மோசடியானவை. மோசடித் தேர்தல் நடத்தி காசுமீரத்தில் சனநாயகம் விளங்குவதாகக் காட்டுவதில் இந்துத்துவத்துக்கும் இந்தியத்துக்கும் வேறுபாடில்லை.16. இந்துத்துவமும் இந்தியமும் செயல்படுத்திய வஞ்சகம், மோசடி, ஏமாற்று, ஆணவம், அடக்குமுறை... இவற்றின் எதிர்வினையாகவே காசுமீரத்தில் 1987க்குப் பின் ஆயுதப் போராட்டம் மூண்டது. ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதன் பெயரால் இந்திய அரசு பெருமளவில் இராணுவத்தைக் குவித்துள்ளது. இறுதியாகப் பார்த்தால், காசுமீரத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருப்பது இந்தியப் படையே எனலாம். இந்த இராணுவ ஆட்சியை இந்துத்துவமும் இந்தியமும் நியாயப்படுத்தி வருகின்றன.17. அமர்நாத் திருப்பயணிகளுக்காக நிலம் ஒதுக்குவது தொடர்பான சிக்கலை, காசுமீர மக்கள், காசுமீரை இந்தியமயமாக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே கருதுகிறார்கள். ஜம்மு இந்துத்துவப் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடிகள் உயர்த்தப்பட்டது ஒரு சரியான குறியீடே. இந்துத் துவமும் இந்தியமும் காசுமீர மக்களின் தேசியப் பேரெழுச்சியை ஒடுக்குவதில் ஒன்றுபட்டுள்ளன.18. இந்துத்துவத்தை எதிர்க்க இந்தியத்துடன் ஒன்றுபடுவது எவ்வளவு பெரிய ஏமாளித்தனம் என்பதை காசுமீர் மக்களின் பட்டறிவு நமக்கு உணர்த்த வேண்டும்.
நன்றி : தமிழ்தேசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment