Tuesday, November 25, 2008

மன்மோகன் சிங் : நவீன தருமன் - ரஹீம்

மன்மோகன் சிங் : நவீன தருமன்
Written by · ரஹீம் புதிய ஜனநாயகம் Wednesday, 05 November 2008
"நல்ல காலம் முடிந்தது'' இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.
பங்குச் சந்தையும், தகவல்தொழில்நுட்பத் துறையும், ரியல் எஸ்டேட் வியாபாரமும், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறையும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் இந்தியாவை வல்லரசாக்கி வருவதாகக் கூறி வந்தார்கள். ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி இந்தத் தொழில்கள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது; தாராளமயம் உருவாக்கியிருந்த நீர்க் குமிழி உடைந்து விட்டது. ஆளும்வர்க்கம் பீற்றிக் கொண்ட 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, வேரோ விழுதோ அற்ற வளர்ச்சி என்பது நிரூபணமாகிவிட்டது.
அரசு, பொருளாதாரத்தில் தலையீடு செய்வதை "லைசென்ஸ் ராஜ்ஜியம்'', "கோட்டா ராஜ்ஜியம்'' எனத் தூற்றிய முதலாளிகள், இன்று அரசாங்கம் உதவ வேண்டும் எனத் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்வதன் மூலம், புதிய முதலீடுகளைச் செய்யாமல் பணத்தை இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக் கொள்வதன் மூலம் அரசையும் மக்களையும் ""பிளாக் மெயில்'' செய்கிறார்கள். முதலாளிகளின் மிரட்டலுக்கு ஆடிப் போன மன்மோகன் ப.சிதம்பரம் கூட்டணி 1,85,000 கோடி ரூபாயைச் சந்தையில் கொட்டுகிறது.
மனசாட்சியோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகுதான்; பல இலட்சக்கணக்கான விவசாயிகள் தாராளமயத்தால் ஓட்டாண்டியாகி, விவசாயத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்த பிறகுதான், மன்மோகன் சிங் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற அரைகுறை திட்டத்தை அறிவித்தார்.
இப்பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு முதலாளியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவில்லை; எந்தவொரு முதலாளியும் ஓட்டாண்டியாகித் தெருவுக்கு வந்துவிடவில்லை. ஆனாலும் கடந்த அக். 6 தொடங்கி அக்.20க்குள், இரண்டே வாரத்திற்குள் 1,85,000 கோடி ரூபாய், முதலாளிகள் வாரிக் கொள்ளும்படி சந்தையில் கொட்டப்பட்டது. இது, மன்மோகன் சிங்கின் சொந்தப் பணமோ, முதலாளிகளின் அப்பன் வீட்டுச் சொத்தோ அல்ல. இந்த 1,85,000 கோடி ரூபாயும் இந்திய மக்களின் சேமிப்புப் பணம்; மக்கள் அரசாங்கத்திற்கு வரியாகக் கட்டிய பணம்.
இந்திய முதலாளிகளும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்துள்ள கருப்புப் பணம் மட்டும் 55 இலட்சம் கோடி ரூபாய் என்றும்; கருப்புப் பணத்தை சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்குவதில் இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன (தினமணி 16.10.2008) மன்மோகன் சிங் இந்தக் கருப்புப் பணத்தை முடக்கினால், பங்குச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள "நட்டத்தை' மட்டுமல்ல, இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கடன்களைக் கூட அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். ஊழல்வரி ஏய்ப்பின் மூலம் குவிக்கப்பட்ட இந்தக் கருப்புப் பணத்தின் மீது கை வைக்கத் தயங்கும் மன்மோகன், பொதுமக்களின் சேமிப்பைப் பங்குச் சந்தை சூதாடிகளுக்காக வாரியிறைக்கிறார்.
மாணவர்களுக்குக் கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்; சிறு தொழில்களுக்கு உரிய நேரத்தில் உதவ மறுக்கும் வங்கிகள்; விவசாயக் கடன் தர மறுக்கும் வங்கிகள், பங்குச் சந்தைச் சூதாடிகளைக் காப்பாற்ற வட்டியைக் குறைத்து, தங்கள் கஜானாவைத் திறந்து வைத்துவிட்டன.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க முதலாளிகளைக் கைதூக்கி விட 70,000 கோடி அமெரிக்க டாலர் பெறுமான மானியத் திட்டத்தை அறிவித்த பொழுது, அதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நாடகத்தை நடத்த வேண்டியிருந்தது. மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கும்பலோ, 1,85,000 கோடி ரூபாய் மானியத்தை வாரிக் கொடுக்க, யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பொழுது, அதனால் வங்கிகள் நட்டமடையும் எனக் கவலைப்பட்ட பொருளாதார நிபுணர்கள்; அத்திட்டத்தை ஓட்டுவங்கி அரசியல் எனக் கிண்டலடித்த நடுத்தர வர்க்கக் கனவான்கள், முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மானியம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். ஏதோ நாட்டு நலனுக்காகத்தான் இந்தப் பணம் கொடுக்கப்பட்டதைப் போலச் சாதிக்கப் பார்க்கிறார்கள்.
பங்குச் சந்தை வளர்ச்சி 20,000 புள்ளிகளாக ஊதிப் பெருத்திருந்தபொழுது, முதலாளித்துவ நிறுவனங்களின் பங்கு மதிப்பு 62,16,900 கோடி ரூபாயாக வீங்கியிருந்தது. இந்தச் சரிவினால், இந்தச் சந்தைத் திரட்சி சரிபாதியாக வீழ்ந்து விட்டது. இதனால், அம்பானி, மிட்டல் போன்ற உலகக் கோடீசுவரர்களின் சொந்த சொத்து மதிப்பும் படுத்துவிட்டது. மீண்டும் பங்குச் சந்தை வீங்கினால்தான் இவர்களின் சொத்து மதிப்பு உயரும். அதற்குத்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் பயன்படும். வீட்டுக் கடன் மூலம் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் கைகளுக்கும்; நுகர்பொருள் கடன் மூலம் மேட்டுக்குடி ஊதாரிக் கும்பலின் பாக்கெட்டுக்கும்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் செல்லப் போகிறது.
மாறாக, பங்குச் சந்தை வளர்ச்சியின் கவர்ச்சியில் மயங்கி, அதில் பணத்தைப் போட்டு, 3,00,000 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கும் நடுத்தர வர்க்கத்து ஆசாமிகளுக்குக் கூட இந்தப் பணம் உதவப் போவதில்லை.
···
பங்குச் சந்தையை சேவைத் துறை எனப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த மன்மோகன் சிங், இன்று அதனைச் சூதாட்டப் பொருளாதாரம் எனச் சொல்லும் அளவிற்கு இடிந்து போய் நிற்கிறார். "பங்குச் சந்தை சூதாட்ட பேர்வழிகளைக் கட்டுப்படுத்த உலகளாவிய அளவில் கண்காணிக்கும் நிர்வாக அமைப்புகள் தேவை'' என சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஆசிய ஐரோப்பிய நாடுகளின் மாநாட்டில் உபதேசம் செய்திருக்கிறார்.
இந்தியப் பங்குச் சந்தையின் சரிவுக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் காரணம் என முதலாளித்துவப் பத்திரிகைகள் கூடக் குற்றஞ் சுமத்துகின்றன. அந்நிறுவனங்கள் 1,000 கோடி டாலர் பெறுமான பங்குகளைத் திடீரென விற்று, இலாபத்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போனதால், பங்குச் சந்தை மட்டுமல்ல, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து விட்டது. மன்மோகன் சிங், இந்த வெளியேற்றத்தைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ பங்குச் சந்தை சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், மேலும் பல சலுகைகளை வாரியிறைத்து வருகிறார்.
ஒருவர், தான் இன்னார் எனக் காட்டிக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பங்கேற்புப் பத்திரம் என்றொரு வசதி இருக்கிறது. கருப்புப் பணத்தை நல்ல வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் குறுக்கு வழி இது. இந்தியாவின் கருப்புப் பண முதலைகள், அந்நிய நிதி நிறுவனங்களின் மூலம் இந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டுதான் சூதாடுகிறார்கள் என மோப்பம் பிடித்துவிட்ட பங்குச் சந்தை பரிமாற்ற வாரியம், இந்தக் குறுக்கு வழியை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியது. மன்மோகன் சிங் இத்தடைக்கு ஒத்துக் கொள்ளாததால் அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செய்யும் முதலீட்டில், பங்கேற்புப் பத்திரங்கள் 40 சதவீத அளவிற்குள்தான் இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுதோ, பங்குச் சந்தை சரிவைத் தடுத்து நிறுத்துவது என்ற பெயரில், இக்கட்டுப்பாடு முற்றிலுமாக நீக்கப்பட்டு, கருப்புப் பணப் பேர்வழிகளின் முதலீட்டுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்ற அவரது உபதேசம் ஊருக்குத்தான் போலும்!
···
பங்குச் சந்தையை மட்டுமல்ல, இந்திய நிதி சந்தை முழுவதையும் அந்நிய நிறுவனங்களிடம் தூக்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் மன்மோகன் சிங் கும்பலின் இலட்சியம். அந்நிய நிதி நிறுவனங்கள் காப்பீடு துறையில் 26 சதவீதம் அளவிற்கு மூலதனம் இடுவதை அனுமதித்திருக்கும் மன்மோகன் சிங், அதனை 49 சதவீதமாக உயர்த்த விரும்புகிறார்.
இந்தியாவிலுள்ள தனியார் வங்கிகளைப் பன்னாட்டு பகாசூர வங்கிகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வசதியாக, அந்நிய வங்கிகள் இந்திய வங்கிகளில் மூலதனமிடுவதை 74 சதவீதமாக உயர்த்தவும்; இதற்காக வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திருத்தவும் முயன்று வருகிறது, காங். கூட்டணி ஆட்சி.
தொழிலாளர் சேமநல நிதியை நிர்வகிப்பதை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கி, அந்நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டிச் சூதாடுவதைச் சட்டபூர்வமாக்குவதற்காக சேமநல நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையத்தை நிறுவ சட்டம் தயாரிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.
மன்மோகன் சிங்கால் நிதித்துறை தொடர்பாக எடுக்கப்படும் ஒவ்வொரு "சீர்திருத்தமும்'' வாடிக்கையாளர் நலனுக்கானது அல்ல; அரசின் அரைகு றைக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதித்துறையை, அமெரிக்காவைப் போல நிதி ஆதிக்கக் கும்பலிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கமுடையது. பூனைக்கு மணிகட்ட வேண்டும் என்றால், மன்மோகன் சிங் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். ஆனால், அவரது சிஷ்யப் பிள்ளை ப.சிதம்பரமோ, அமெரிக்காவின் தனியார் வங்கிகள் திவாலானதைப் பார்த்த பிறகும், "இந்திய நிதித்துறையைச் சீர்திருத்தம் செய்வதற்குத் தடை போட முடியாது'' எனத் திமிராக அறிவிக்கிறார்.
அமெரிக்காவின் வீட்டுக் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு, இந்தியப் பொதுத்துறை வங்கிகள் 450 கோடி ரூபாயும்; இந்தியத் தனியார் வங்கிகள் 2,100 கோடி ரூபாயும் இழந்துவிட்டதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இது அரைகுறை உண்மைதான் என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இந்திய வங்கிகள் வகைதொகையின்றி அளித்திருக்கும் கிரெடிட் கார்டு கடன்கள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், நுகர்வோர் கடன்கள் ஆகியவை எதிர்காலத்தில் இந்தியாவிலும் அமெரிக்க பாணியில் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என வல்லுநர்களே அச்சப்படுகின்றனர். குறிப்பாக, தகவல்தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் வேலையிழப்பும், சம்பள வெட்டும் வங்கிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
மேலும், இந்தியப் பணத்தின் சந்தை மதிப்பை அரசின் தலையீடின்றி, சூதாடிகள் தீர்மானிக்க விட்டு விடவேண்டும் என்பதுதான் மன்மோகனின் வாழ்நாள் இலட்சியம். ஒருவேளை அவரது கனவு முன்பே நிறைவேறியிருந்தால், இந்நேரம் இந்தியா திவாலாகியிருக்கும். கட்டுப்பாடு பற்றி உபதேசிக்கும் மன்மோகன் சிங், தனது இந்தக் கனவைக் கைகழுவிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
···
இந்தியா, அமெரிக்கா போல மாற வேண்டும் எனக் கத்திக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்துக்கு, இந்த ""நெருக்கடி'' சரியான பாடம் புகட்டிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் கொழுத்த சம்பளத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் சீமா குக்ரேஜாவை, அவரது நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, வேலை நீக்க உத்தரவில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 1,900 ஊழியர்கள் ஒரே நொடியில் வேலையில் இருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் போராடிய பிறகு, ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயல் அவர்களைத் ""தாயுள்ளத்தோடு'' வேலைக்கு எடுத்துக் கொண்டார். இந்தக் கருணைக்குப் பின்னே சம்பள வெட்டு என்ற குருவாள் மறைந்திருந்தது. இரண்டு இலட்சம் வரை சம்பளம் வாங்கிய தனியார் விமான நிறுவன ஊழியர்களுக்கு இன்று 10,000 ரூபாய் சம்பளமாகக் கிடைத்தால் அதிருஷ்டம்தான்! வேலை பறி போய்விடும் என்பதால் தகவல் தொழில்நுட்பத் துறையில் யாரும் வருடாந்திர சம்பள உயர்வு பற்றியோ, போனசு பற்றியோ வாயே திறப்பதில்லை எனக் கூறப்படுகிறது. சம்பள வெட்டு, இல்லையென்றால் வேலையிழப்பு இந்த இரண்டில் ஒன்று ஊழியர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
தெருவில் இறங்கிப் போராடும் தொழிலாளர்களை, "நான்சென்ஸ்'' என எரிச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தெருவில் இறங்கி "வாழ்க, ஒழிக'' முழக்கம் போட வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது. தொழிற்சங்கத்தில் சேர்வதை கௌரவக் குறைச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தங்களுக்காக யாராவது பரிந்து பேச மாட்டார்களா எனத் தவிக்கிறார்கள். தாராளமயத்தால் இவர்கள் அனுபவித்த வசதிகள் கிரெடிட் கார்டு, வண்டிக் கடன், வீட்டுக் கடன் ஆகியவை இன்று வேலையிழப்பாலும், சம்பள வெட்டாலும் சுமையாக மாறி, அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. நிரந்தரமானது என அவர்கள் நம்பிக் கொண்டிருந்த இந்த சொர்க்க வாழ்க்கை, இன்று நொறுங்கி விழுகிறது.
நெருக்கடியில் சிக்கிக் கொண்ட ஜெட் ஏர்வேஸ், கிங் ஃபிஷர் ஆகிய நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கும், இந்திய விமான ஆணையத்திற்கும் தர வேண்டிய 3,000 கோடி ரூபாயை மெதுவாக அடைக்கலாம் என கருணை காட்டியிருக்கிறார், மன்மோகன் சிங். அதேசமயம், ஏர்இந்தியாவில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள 15,000 ஊழியர்களுக்குக் கருணை காட்ட அரசு தயாராக இல்லை. இதுதான் அமெரிக்க பாணி; தொழிலாளர்களை வேலையில் இருந்து கறிவேப்பிலை போலத் தூக்கியெறிவதுதான் அமெரிக்காவின் தொழில் உறவுக் கொள்கை. இந்தத் தீவட்டிக் கொள்கையைத்தான் தொழிலாளர் நலச் சீர்திருத்தம் என்ற பெயரில் அமலாக்கத் துடிக்கிறார், மன்மோகன் சிங்.
தனியார்மயம் சூதாடிகளைத் தவிர, உழைக்கும் மக்களில் எந்தவொரு பிரிவினருக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஊழியர்கள், இடைநிலை அதிகாரிகள் குறைந்தபட்ச வாழ்க்கை பாதுகாப்பையோ, வேலை பாதுகாப்பையோ அளிக்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டது. இச்சூதாட்டப் பொருளாதாரத்தை, அமைப்பாகத் திரண்டு போராடி வீழ்த்துவதை விட்டுவிட்டு, விதியே என்று நமது தலையில் சுமப்பது இனியும் அறிவுடைமையாகாது!

Wednesday, November 19, 2008

இது, கொஞ்சம் ஓவர் தான்! - எஸ். அர்ஷியா

தன் முதுகை தன் கையாலேயே தட்டிக்கொள்ளச் செய்யும் 'நல்லவர்' அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.டி.நானாவதி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கையில் கொடுத்துவிட்டார்.அந்த விசாரணைக் கமிஷனை நியமிக்கும் போது, மோடி தன் மனதுக்குள் என்ன நினைத்து அமைத்தாரோ... அதுவே நடந்துவிட்டிருக்கிறது.அசுர குணம் கொண்ட ஓர் மனிதனை, 'அய்யோ பாவம். அவர் அப்பாவியாக்கும்!' என்று வா¢ந்து கட்டி நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் அந்த அறிக்கை, 'குஜராத் ரயில் எ¡¢ப்பு சம்பவம் முஸ்லிம் மத போதகர் மெளலானா உமர்ஜியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் செயல்' என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளது.நாடு முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து, தேசத்திற்கு பெருமையையும், உலக நாடுகளிடம் அன்பையும் பெற்ற(?) சங் பா¢வார அமைப்புகள், இந்த அறிக்கையால் மேலும் மகிழ்ந்து போயிருக்கின்றன. காவிக் கொடிகள் சிலுசிலுத்துப் பறக்கின்றன.இரண்டாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களின் சொத்துகளையும் தீ வைத்துக் கொளுத்தியவர்களுக்கு, 'ஊருவிட்டு ஊரு வந்து உழைத்துப் பிழைத்த, 'பெஸ்ட் பேக் கா¢'யின் ஊழியர்களை, கதவைப் பூட்டி எ¡¢த்துக் கொன்றவர்களுக்கு, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற் றைக் கிழித்து, குறைமாதக் கருவை வாள்முனையில் உருவியெடுத்து, 'ஒரு முஸ்லிம் கூட உயிரோட இருக்கக் கூடாது' என்று கொக்கா¢த்தவர்களுக்கு, கைக்கூப்பிக் கும்பிட்டு உயிர்ப்பிச்சைக் கேட்ட நபரை ஈவுயிரக்கமின்றி வெட்டிக்கொன்று குதூகலித்தவர்களுக்கு, இந்த அறிக்கை துளிக்கூட சங்கடத்தைக் கொடுக்கவில்லை. மாறாக ¨தா¢யத்தையும், இனி எதையும் செய்யலாம் என்ற துணிச்ச லையும் தான் கொடுத்துருக்கிறது.பொய்ப் புனைந்துரைகளைக் கொண்ட இந்த அறிக்கை வெளியானவுடன், காவிகளின் சலசலப்பும், கொக்கா¢ப்பும் கூடியிருக்கிறது.அதை, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் வாயாலேயே கேட் போம். 'இறுதியில் உண்மை வெளிவந்துவிட்டது. பொது மக்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளியிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மீதும், முதல்வர் நரேந்திரமோடி மீதும் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யென உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை சா¢ என்று நிரூபணமாகியிருக்கிறது. அந்த சம்பவம் தீ விபத்து அல்ல. திட்டமிட்ட வன் செயல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனி, நானாவதி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டுமென வற்புறுத்துவோம். லாலு பிரசாத் யாதவால் நியமிக் கப்பட்ட யூ.சி.பானர்ஜி கமிஷனின் அறிக்கை, அரசியல் வன்மம் கொண்டது. அரசியல் நிர்பந்தங் களால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அறிக்கை அது. அதன் பின்னணியில் பெரும் அழுத் தங்களும் தலைகளும் உள்ளன. சங்பா¢வாரங்கள் அப்பழுக்கற்றவை' என்று வர்ணித்திருக்கிறார்.தீப்பந்தத்தால் தலையைச் சொறிந்து கொள்பவர்களால் மட்டுமே, இப்படி பிதற்ற முடியும். காவி களுக்கு, இது கைவந்தக் கலை!கடந்த 2002 ம் ஆண்டு பிப்ரவா¢ மாதம் 27 ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்துக்கு உள்ளாகிறது. அந்த ரயிலின் எஸ் - 6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 58 பேர் உயிரிழக்கிறார்கள்.இதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத் ஆகிய சங் பா¢வாரங்கள் வன்முறையில் இறங்குகின்றன. முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்படுகின்றனர். அவர்களின் சொத்துகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து கள் அழிக்கப்படுக்கின்றன.அனாதரவானவர்கள் அபயம் தேடி போலிஸ் நிலையங்களுக்கு ஓடுகிறார்கள். அங்கிருப்பவர்கள் அரசு விசுவாசத்துக்கு ஆளாகி, உள்ளே வந்தவர்களை வெளியே அனுப்பி வைக்கிறார்கள். `உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்` என்று உன்மத்தமாய் அறிவுரைக் கூறி வெளியேற்றுகிறார்கள்.அப்போது மாநில முதல்வர் நரேந்திர மோடி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அதனால் சங் பா¢வார அமைப்புகள் வன்முறையை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே போயின. அதைக் கட்டுப்படுத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயி யும் முயற்சிக்கவில்லை எனும் குற்றச்சாட்டும் உலகளவில் உள்ளது.வன்முறைக் கும்பலுக்கு இந்த செய்கைகள் மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே கட்டுப் பாடற்றவர்களாக வளைய வந்தவர்கள் அவிழ்த்துவிடப்பட்ட மிருகங்களாக தெருக்களில் அலைகிறார் கள். அஹிம்சையை போதித்த மகாத்மாவின் மாநிலம், ஹிம்சைகளின் தலைநகராகிறது.அதிர்ந்து போன பொது மக்கள், நீதி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உலக நாடுகளில் உள்ள நலம்விரும்பிகள் மத்திய அரசைத் தலையிடச் சொல்லி வற்புறுத்துகின்றன. கவிமனம் நிறைந்த பிரதமர் வாஜ்பாயி கல்மனம் கொண்டவராக தன்னைக் காட்டிக்கொண்ட சந்தர்ப்பத்தை நாட்டிற்கு தருகிறார்.மோசமாக வளர்ந்து வரும் மோடியை எதிர்த்து அரசியல் செய்ய ஆர்.எஸ்.எஸ்சால் கைகள் கட்டப் பட்டிருந்த வாஜ்பாயி, குடியரசுத் தலைவா¢ன் தலையீட்டின்போ¢ல் துயில் கலைகிறார். தேசம், தலை குனிந்து நின்றது.உலகமே உற்றுப் பார்த்த அந்த சம்பவங்களை விசா¡¢க்க மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஓர் நபர் விசாரணைக் கமிஷனாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி.ஷாவை நியமிக்கிறார். ஆடுகளின் குறைகளைக் கேட்க, ஓநாய் ஒன்று வருகிறது.சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதாகச் சொல்லி, ஓர் நபர் விசாரணைக் கமிஷனின் நீதிபதி கே.ஜி.ஷா, சரமா¡¢யாக முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதித்து விடுகிறார். இதைத்தானே மோடி எதிர்பார்த்தது.அவரது சினிமாத்தனமான மானாவா¡¢ அதிரடித் தீர்ப்புகளால் நீதித்துறையே திக்குமுக்காடிப் போனது. அதன்பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு, அவரது தீர்ப்புகளில் பலவற்றைப் பா¢சீலித்து, பலரது உயிரைக் காப்பாற்றியது.நீதித் துறையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி.ஷாவின் 'தாம் தூமில்' அதிர்ந்து, தலைமையை மாற்றச் சொல்லி வற்புறுத்தின. இக்கட்டுக்குள்ளான குஜராத் மாநில மோடி அரசு, காவிப் பின்னணி கொண்ட மற்றொரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜி.டி. நானாவதியைப் பிடித்துக்கொண்டு வருகிறது. அவரை முதன்மையாகப் போட்டு, கமிஷன் நடந்து வந்தது.ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி கே.ஜி.ஷா, கடந்த மார்ச் மாதம் மூப்படைந்து உயி¡¢ழக்க... அவரது இடம் மற்றும் ஒரு காவிப்படையின் ஆதரவு பெற்ற குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அக்ஷய் மேதாவால் நிரப்பப்பட்டது.அந்த இருவரும் ஆறாண்டுகளும் ஆறுமாதங்களும் ஓய்வில்லாமல் விசா¡¢த்த(?) தகவல்களின் அடிப்படையில், அறிக்கையின் முதல் பகுதியை 2008 செப்டம்பர் 25 ம் தேதி சமர்ப்பித்து விட்டனர்.விசாரணையின்போது, நரேந்திர மோடிக்கும், குஜராத் அரசுக்கும், மாநில போலிசுக்கும் எதிராகச் சொல்லப்பட்ட சம்பவங்கள் எதையும் பதிய, அக்குழு மறுப்பதாகக் குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தன.ஆயிரத்துக்கும அதிகமான சாட்சியங்களின் அடிப்படையில்(?) 168 பக்கங்களைக் கொண்டு தயா¡¢க்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், முதல்வர் நரேந்திர மோடியிடம் வழங்கிய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜி.டி.நானாவதி,' அந்த சம்பவத்தின் முதல் பகுதி அறிக்கையை முதல் கட்டமாகத் தாக்கல் செய்திருக்கிறோம். அடுத்தக் கட்ட அறிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் சமர்ப்பிக்க முயலுவோம். அதில், சம்பவத்தின்போது போலிஸ் நடந்து கொண்ட முறை, அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெறும். தேவைப்பட்டால், மூன்றாவது கட்ட அறிக்கை தயா¡¢ப்பிலும் ஈடுபடுவோம். இது ஒரு வித்தியாசமான கமிஷன். நீதி விசாரணைக்குழு இல்லை. அதேவேளையில் உண்மை கண்டறியும் அமைப்பாகும்!' என்று, தன் முதுகிலும் தானே தட்டிக் கொள்கிறார்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, 'இதில் துளிக்கூட சம்பந்தம் இல்லை' என்று வலிந்து சொல் லும் அந்த அறிக்கை, முஸ்லிம் மதபோதகர் மெளலானா உமர்ஜியை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள் ளது. சம்பவத்தின் முதல் நாளிரவு அவர் 140 லிட்டர் பெட்ரோலை சேகா¢த்து வைத்து, அடுத்த நாள் சம்பவத்துக்கு பயன்படுத்தினார்.எஸ். - 6, எஸ். - 7 பெட்டிகளின் கதவுகளை ஹஸன் லாலா என்பவர் வலுக்கட்டாயமாகத் திறந்து, உள்ளே தீப்பந்தங்களை வீசினார் என்று முடிவுக்கு வருகிறது.அதேவேளையில், 'மாநில முதல்வர் நரேந்திர மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ, அல்லது போலிஸ் ஆகியோ¡¢ன் பங்கு இந்த சம்பவத்தில் துளிகூட இல்லை. அவர்கள் எடுத்த நடவ டிக்கைகளில் எந்த இடத்திலும் குறைபாடுகள் தென்படவில்லை' என்றும் முழு பூசணிக்காயை உள்ளங்கைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது, அந்த அறிக்கை!குஜராத் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்திவரும் `மக்களுக்கான பொது நீதி` அமைப்பின் இயக்குநர், டீஸ்டா செதல்வாட், 'அப்போதைய ஆளும் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவத்தை பூசி மறைக்கும் இந்த அறிக்கை, வரப் போகும் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. மோடி என்ன நினைத்திருக்கிறாரோ... அதுவே அறிக்கையாக வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் குஜராத் வன்முறை சம்பவம் குறித்து விசா¡¢க்க, ராகவன் கமிட்டியை அமைத்திருக்கிறது. அதன் அறிக்கை டிசம்பருக்குள் வரவிருக்கிறது. அதற்கு முன் என்ன அவசரம் என்று தொ¢யவில்லை!' என்கிறார்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் பதவியேற்றதும் அதன் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ், கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிந்த சம்பவத்தை ஆராய யூ.சி.பானர்ஜி கமிட்டியை அமைத்தார். தொழில் நுட்ப ரீதியாக ஆய்வு செய்த அந்தக்குழு, 'அது ஒரு விபத்து. பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது போல சம்பவ இடத்தில் முஸ்லிம் கும்பல் எதுவும் கோத்ரா ரயில் நிலையத்தில் இருக்கவில்லை!' என்று அறிக்கையை சமர்ப்பித்தது.மத வாத அமைப்புகள் தவிர மற்ற எல்லோராலுமே வரவேற்கப்பட்ட அந்த அறிக்கை, நாடாளு மன் றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று, முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலால் கட்சிக்காரர் ஒருவரால் குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கப்பட்டது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, வேறுகதை!நானாவதி கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டும் முஸ்லிம் மதபோதகர் மெளலானா உமர்ஜியின் மகன் சாயித் உமர்ஜி, 'சம்பவம் நடந்த ஓராண்டுக்குப் பின் என் தந்தையை போலிஸ் கைது செய்து கொண்டு போனது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உள்ளூர் போக்கி¡¢ ஒருவன் தந்த தகவலின் போ¢ல், கைது செய்யப்பட்ட என் தந்தையை சம்பவத்துக்கான மூலக் காரணம் என்று, பின்பு குற்றம் சாட்டி வழக்கை ஜோடித்தனர். இந்த அறிக்கை ஒரு தரப்பானது!' என்கிறார்.நானாவதி கமிஷன் முன்பு ஆறு ஆண்டுகளாக ஆஜராகி குறுக்கு விசாரணை செய்து வரும் வழக்க றிஞர் முகுல் சின்கா, 'அறிக்கை, சாட்சியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் படவில்லை' என்றும் 'இது எனக்கு ஆச்சா¢யமாக இல்லை!' என்றும் குறிப்பிடுகிறார்.மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், 'மோடி அப்பாவி என்று அறிக்கையில் கூறப்பட்டுள் ளதை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை. அவர் சமூகக் கிருமிகளின் மையம். செய்த குற்றங்களுக் காக அவர் தண்டிக்கப்பட்டிருந்தால், எந்த இளைஞனும் இன்று தீவிரவாதியாக மாறியிருக்க மாட் டான்!' என்கிறார்.கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த அறிக்கை, முதல் கட்டம்... இரண்டாம் கட்டம்... என்று பி¡¢க்கப்படுவதன் பின்னணி, சந்தேகம் தரக்கூடியதாகவே இருக்கிறது. ஒட்டு மொத்தமாகச் சமர்ப்பிக்கப்படாமல், பாகம் பாகமாக தரப்படுவதன் பின்னணியில், மோடித்துவம் ஒளிந் திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது, தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு இந்தியன் முஜாஹிதீன் எனும் பெயா¢ல் செய்யும் கைவண்ணம் தான் என்று மதவாத அமைப்புகள் வாய் வலிக்காமல் சொன்னாலும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பத்திரிகைகள் கை வலிக்க வலிக்க வலிந்து எழுதினாலும், குஜராத் சம்பவத்தைப் பொறுத்தவரை, 'வெடிக்காத குண்டு'களால் அம்மாநில மக்களுக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி யின் மீது ஒரு சந்தேகக் கண் இருக்கவே செய்கிறது.அதை மோடி அறியாதவர் இல்லை. தன் மீது படிந்திருக்கும் சந்தேகத்தை திசை திருப்ப வழக்கமான பாணிகளை கையாள்வது, இப்போதைக்கு கூடுதல் ஆபத்தையே தர வல்லது என்பதும் அவருக்குத் தெரியும்.தற்போது, அதற்குத் தேவை ஒரு புதிய அணுகுமுறை!தன் மீது படிந்திருக்கும் பழைய அழுக்கையும் புதிய அழுக்கையும் ஒரே நேரத்தில் கழுவிக்கொள்ள அவர் செய்துகொண்ட ஏற்பாடுகளில் ஒன்று தான் நானாவதி கமிஷனின், 'மோடி, ரொம்ப நல்லவ ராக்கும்!' எனும் அறிக்கை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்க முடியும்.வன்முறை அரசியலால் மூன்று முறை முதல்வராகிவிட்ட நரேந்திர மோடி, 'முந்தைய தேர்தல்களைப் போல, ஓட்டுக்களை அள்ள இனி வன்முறை இந்துத்துவா கை கொடுக்குமா?' எனும் பயத்தில், அவர் தன்னை நல்லவராகவும் மாநிலத்தின் ரட்சகராகவும் காட்டிக் கொள்வதற்கு கேட்டுவாங்கிப் போட்டுக் கொண்ட அவதாரமே, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி.நானாவதியின் நற்சான்றிதழ்!அணுசக்தி ஒப்பந்தம், ஏறிவரும் உணவுப் பொருட்களின் விலைவாசி, தொழில் நுட்பம் வளர்ந்தாலும் வாழ்க்கைத் தரம் உயராமை, எதிர்வரும் தேர்தல், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, இவைபோக மூன்றாவது அணி எனும் பெயா¢ல் எடுக்கப்படும் முஸ்தீபுகள் என்று நாடு கிடக்கும் கிடப்பில், நரேந்திர மோடி கேட்டு வாங்கிப் பூசிக்கொண்டிருக்கும் இந்த அவதாரம், கொஞ்சம் ஓவர் தான்!

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்

சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!வினவு
‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடிய விடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது. ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா, நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசுக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally) ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதை வைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.இது தொடர்பாக என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது” இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை. எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள். ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.அது போலவே, “எஸ்.சி - பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் (ம.க.இ.க.) சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்ல வைக்கப்பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறி நீதிமன்றத்தின் சாதிவெறியை விடக் கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும். ஒளிபரப்பப்பட்ட ஒரு வன்முறை - ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான் தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும், ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?“ஏனென்றால் இவை ஒளிபரப்பப்படவில்லை” என்று சொல்லி சமாதானமடைந்து கொள்வோமா? மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனசாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா? அத்தகைய ‘நியாயம்’ பதில் ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?இவையெல்லாம் ஒளிபரப்பப்படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப்பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்க வேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது. தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” - இதுதான் காந்தியின் பதில். எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்டபோது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார். அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர்சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.இப்படியொரு பச்சைப் பொய்யை சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால் “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால் இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம். போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை. இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ பெயரிடப்படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’. அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள். தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.சாதித் தலைவரான தேவரை தேசியத் தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித் தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது. மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது! எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை. காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் - டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்.“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.“சார் வெளியூர் போல... நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.அவர்கள் பத்து பேர் - நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன். நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை. பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை - அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது!

Sunday, November 9, 2008

அமெரிக்க மக்களின் பரிதாப வாழ்கை - புதிய ஜனநாயகம்

"இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.''— ஜார்ஜ் டபிள்யூ. புஷ்.
அமெரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ் அளித்துள்ள வியாக்கியானம் இது. இதுவரை அமெரிக்கா கண்டிராத கோமாளி அதிபரான புஷ்ஷின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெரிக்காவின் முரண்படும் சமூக இயக்கத்தினை தெளிவாக விளக்குகின்றன. சந்தையில் சூதாடுவதற்கு முதலாளிகளுக்கு சுதந்திரம்; அந்தச் சூதாட்டச் சுமையினை ஏற்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யவேண்டியது மக்களின் கடமை! சந்தையின் சுதந்திரத்தில் கொள்ளை இலாபம் அள்ள முயன்று திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளி வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தப் பேரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு நிவாரணம் எதுவுமில்லை.
2001இல் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு மீண்டுமொருமுறை பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழலாம் என்றே அமெரிக்க அரசு மக்களை அச்சுறுத்தி வந்தது. அதற்கான புதிய சட்டங்கள், கெடுபிடிகள், சோதனைகள், கைதுகள், விசாரணைகள் எல்லாம் ஜரூராக நடந்து வந்தன. ஆனால் எதிர்பார்த்த தாக்குதல் பயங்கரவாதிகளிடமிருந்து வரவில்லை. நெருக்கடி என்ற பெயரில் தப்பித்துக்கொள்ளும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்தே அந்த சுனாமி தாக்குதல் வந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சுனாமியின் அறிகு றிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஐந்து சதவீதமாக இருந்த வேலையின்மையின் சதவீதம் பின்பு ஆறைத் தொட்டு தற்போது எட்டை நோக்கி அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 1,59,000 அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். ரியல் எஸ்டேட், கட்டிடம் கட்டுதல் தொடர்பான தொழில்கள், சேவைத் துறை போன்றவை இந்த வேலையிழப்பில் பங்களித்துள்ளன. பல அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்புக்கான ஆண்டிலக்கை அமல்படுத்தி வந்தன.
இப்படி வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 28% அமெரிக்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்படி ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வறியவர்களாக வாழ்வைக் கழிக்கின்றனர். பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் தங்கள் மாத வருமானத்தில் மூன்றிலொரு பங்கினை வீட்டு வாடகைக்கோ அல்லது கடனுக்கு வாங்கிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்கோ செலவழிக்கின்றனர். இது போக நாற்பது சதவீதம் மருத்துவ காப்பீட்டிற்குச் செலவழிக்கின்றனர். அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் இருந்தால் சிகிச்சையின்றி சாகவேண்டியதுதான்.
அமெரிக்க மக்களின் வருமானம் அத்தனையும் முன்கூட்டியே திட்டமிட்ட இலக்குகளில் முதலாளிகளின் கைக ளுக்கு போய்ச் சேருகிறது. சராசரியாகப் பத்து கடன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு அமெரிக்கனும் தனது நிகழ்கால வருமானத்தை மட்டுமல்ல எதிர்கால வருமானத்தையும் முன்கூட்டியே செலவழிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். கடனுக்கு மேல் கடன், கடனை வைத்துக் கடன், வீடு, வாகனங்களை வைத்துக் கடன், பத்திரங்களை வைத்துக் கடன், எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பு உயரும் என்ற மதிப்பீட்டில் பெறப்படும் கடன், மொத்தத்தில் முழு அமெரிக்காவுமே கடனில்தான் உயிர் வாழ்கிறது. ஒரு வயது வந்த அமெரிக்க மாணவன் உயர் கல்வி முடிப்பதற்குக்கூட குறைந்த பட்சம் பத்து இலட்சம் ரூபாய் கடன் தேவைப்படும்.
தற்போதைய திவாலுக்குக் காரணமாகக் கூறப்படும் வீட்டுக் கடன்தான் அமெரிக்க மக்களின் முக்கியமான வாழ்க்கைப் பிரச்சினையாக சமீப ஆண்டுகளில் மாறியிருக்கிறது. சொந்த வீடு வேண்டும் என்ற கனவு தவிர்க்க முடியாத போதையாக ஏற்றப்பட்டு, சராசரி அமெரிக்க நடுத்தர வர்க்கம் இந்த வலையில் சிக்கிக் கொள்கிறது. கடன் கட்ட முடியாமல் போகும் போது வீட்டை, கடன் கொடுத்த அடமான வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். நமது ஊரில் சேட்டிடம் வாகனக்கடன் வாங்கி தவணை கட்டமுடியாத போது வண்டியை சேட்டு எடுத்துக் கொள்வது போலத்தான் இதுவும். இப்படி வீட்டை இழந்தவர்கள் ஐம்பது இலட்சம் பேர் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 500 வீட்டுக்கொரு வீடு இந்த ஜப்தி நடவடிக்கையில் வருகிறது என்றால் இதன் சமூக பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும். செங்கலும், மரமும், சிமெண்ட்டும் கொண்ட இந்த அஃறிணைப் பொருளுக்காக பல அமெரிக்கர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இப்படி வாழ்வின் எல்லாத்துறைகளிலும், நேரங்களிலும் மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாய் சுரண்டும் அளவுக்கு முதலாளிகளின் இலாப வெறி தலைவிரித்தாடுகிறது. தற்போதைய திவாலில் கூட மக்கள் அபரிமிதமாய் வட்டி கட்டிய பணம் ஒரு பிரிவு முதலாளிகளின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை வைத்துச் சூதாடிய நிறுவனங்களுள் சில தோற்றதால் திவாலாகியிருக்கின்றன. ஆனால், இந்தச் சூதாட்டத்தில் எத்தனை மக்கள் வாழ்விழந்து, வீடிழந்து, திவாலாகியிருக்கின்றனர் என்ற விவரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் யாரும் தயாராயில்லை. மற்ற சமூகங்களில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள் அந்த சமூகத்தின் மனநிலையைத் தீர்மானிக்கும் போது அமெரிக்க சமூகத்தில் மட்டும் பணமும், பணம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே மக்களின் உளவியல் சீர்கேடுகளை வடிவமைக்கின்றன. காதலும், விவாகரத்தும், உறவும், பிரிவும், மகிழ்ச்சியும், வேதனையும், கொலைகளும், தற்கொலைகளும் அங்கே பணத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
···
அமெரிக்க நிறுவனங்கள் திவாலான மறுநாளே அதற்கான முதல் பலி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்தேறியது. அக்டோபர் 4, அமெரிக்க வாழ் இந்தியரான 45 வயது கார்த்திக் ராஜாராம் தனது மனைவி, மாமியார், மூன்று மகன்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சோனி நிறுவனத்திலும், பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கியும் அதன் பிறகு பல மாதங்கள் வேலையின்றியும் இருந்த ராஜாராம் தனது சேமிப்பு அனைத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். பல நிறுவனங்கள் திவாலாகி பங்குச் சந்தை தலை குப்புற கவிழ்ந்ததும் ராஜாராமும் நிலை குலைந்து போனார். மரணத்துக்கு முந்தைய அவரது கடிதங்களில் தான் உடைந்து போனதாகவும், உருகும் பொருளாதாரத்தில் தான் ஏராளமான நிதியை இழந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
திவாலாகிய அமெரிக்காவில் மக்களின் இந்தத் தற்கொலைகள் பல தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றுதானே தவிர, பல மாதங்களாகவே குறிப்பாக வீடு ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து கலவரங்கள், கைதுகள், கொலைகள், தற்கொலைகள் நடந்திருக்கின்றன. வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பல வன்முறையுடன்தான் நடந்திருக்கின்றன. இவற்றில் பல ஊடகங்களில் செய்தியாக வருவதில்லை என்பதிலிருந்து அமெரிக்க சமூகம் பல மாதங்களாகவே இந்த பொருளாதார பயங்கரவாதத்துடன்தான் வாழ்ந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.
பிப்ரவரி மாதத்தில் கொலார்டோ பகுதியில் ஒரு வீட்டு உரிமையாளர் தனது வீட்டை காலிசெய்யும் நோட்டீசைக் கண்டு தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். நோட்டீசை ஒட்டச் சென்ற போலீசால் அவர் காப்பாற்றப்பட்டாலும், அவரால் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை. மார்ச் மாதம் புளோரிடா மாநிலத்தின் ஒசாலா பகுதியைச் சேர்ந்த ரோலண்ட் கோர் தனது வீட்டை அடமான வங்கிக்கு ஒப்படைக்கும் நிர்ப்பந்தத்தால் மனமுடைந்து மனைவியையும், வீட்டு நாயையும் கொன்று விட்டு வீட்டுக்கும் தீ வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஏப்ரல் மாதத்தில் புளோரிடாவின் மரியன் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்வதற்கு அறிவிப்புடன் சென்ற ரோபர்ட்டை அந்த வீட்டில் வசித்து வந்த பிராங்க் கொனார்டு துப்பாக்கியைக் காட்டி ""எனது சொத்தை விட்டு நீ அகலுவதற்கு இரண்டு விநாடிகள் தருகிறேன், இல்லையென்றால் நீ மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும்'' என்று மிரட்டினார். பின்னர் பிராங்க் போலீசால் கைது செய்யப்பட்டார். ஜூன் மாதம் 3ஆம் தேதி நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காட்ரீனா தற்காலிக வசிப்பிடத்தில் வசித்து வந்த மின்ஷெவ்வை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அதிரடிப்படை வந்து கண்ணீர் புகைக் குண்டு வீசிப் பல மணிநேர நடவடிக்கைக்குப் பிறகு அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக சுட்டுக் கொன்றது. ஏதோ அமெரிக்கப் படை ஈராக்கிலும், ஆப்கானிலும்தான் மக்களைச் சுட்டுக் கொல்கிறது என்பதல்ல, சொந்தநாட்டு மக்களிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதே தேதியில் ஒரேகான் மாநிலத்தின் முல்ட்னோமா கவுன்டி பகுதியில் வசித்து வந்த ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்குச் சென்ற போலீசின் முன் அந்த நபர் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது துப்பாக்கியை பிடுங்கிய போலீசு பின்னர் அவரைக் கைது செய்தது.
இந்த ஆண்டு முழுவதும் வீட்டைக் காலி செய்யும் இந்தப் பயங்கரவாதமே அமெரிக்க மக்களின் மனச்சிதைவுக்கு காரணமாக இருந்தன என்று பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கலிபோர்னியாவில் இந்த மன அழுத்தங்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் அளிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இத்தகைய பணநெருக்கடிகளால் வரும் அழைப்புகள் 200 சதம் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரின் மருத்துவமனை ஒன்றின் உளவியல் மருத்துவர் கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் பொருளாதார நெருக்கடிகளினால் மனநிம்மதியிழந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 69% அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார். இவற்றிலிருந்து முழு அமெரிக்காவுமே இந்தக் கொதி நிலையில் உழன்று கொண்டிருப்பதை அறிய முடியும். அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு பின்லாடன் தேவையில்லை என்பதையும் இந்தச் செய்திகள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.
வீட்டை இழக்கப் போகும் இந்த ஜப்தி நடவடிக்கைகளுக்காக மனச்சிதைவு அடையும் எல்லோரும் மருத்துவமனைக்கு வருவதில்லை. ஸ்கேர்மென்டோ கவுன்டியின் காவல்துறை ஷெரிஃபீன் உதவியாளர் மார்க் ஹெபெக்கர் பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தபோது இந்த ஆண்டு வீடு காலி செய்யும் நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது இரண்டு உரிமையாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது சக அலுவலர் ஒருவரின் அனுபவத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் தனது உடல் வீட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற குறிப்பை எழுதியிருந்தாராம் என்றால் இதன் கொடூரத்தை யாரும் உணர முடியும். ஹாலிவுட் படங்களில் விதவிதமான வேற்றுக் கிரக ""ஏலியன்ஸ்''கள் அமெரிக்கர்களை அச்சுறுத்துவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எந்தத் திரைப்படமும் மக்களை உண்மையில் வதைக்கும் இந்த முதலாளித்துவ ஏலியன்ஸைப் பற்றி பேசுவதில்லை. ஜூலை மாதம் புளோரிடாவின் மிடில்பர்க் பகுதியில் ஜார்ஜ் என்பவரின் வீட்டிற்கு ஜப்தி அறிவிப்பை ஒட்டச் சென்றது போலீசு. இதைக் கண்டவுடன் வீட்டின் தலைவர் ஜார்ஜூம் அவரது மனைவி போனி மேக்னமும் கதவை அடைத்துக் கொண்டு நோட்டீசை வாங்க மறுத்தார்கள். எப்படியாவது வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த ஜார்ஜ் தனது கையில் துப்பாக்கியிருப்பதாக மிரட்டினார். உண்மையில் அவரது கையில் ஆயுதமில்லை என்பதை அறிந்த போலீசு தங்களை மிரட்டியதாக அவரைக் கைது செய்தது. அந்த தம்பதியினரின் மகள் ராபின் சொல்கிறார், ""இது எங்கள் வீடு, இது மட்டும்தான் எங்கள் வீடு, எனது தந்தை இராணுவத்தில் பணியாற்றியவர், தற்போது உடல்நலமில்லாதவர், அவரைப் போய் உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சொன்னால் அது நியாயமா?''
சந்தைக்கு இலாபம் மட்டும்தான் நியாயம், மற்றெதுவும் அநியாயம்தான். ஈராக்கிலும், ஆப்கானிலும் போரில் ஈடுபட்டுத் திரும்பும் அமெரிக்க வீரர்கள் இரண்டு விதமான மனச்சிதைவை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்று போரினால் வரும் விரக்தியும் இரண்டாவது பொருளாதாரப் பிரச்சினையால் வரும் நிம்மதியின்மையும் காரணமாம். குறைந்த பட்ச அமெரிக்க வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான சம்பளம் கூட இல்லாமல் பல அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் கடனில் சிக்கி வீடுகளை இழந்து நிர்க்கதியாக வாழ்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ஆக்கிரமிப்புக்கு உதவும் இராணுவ வீரர்களைக்கூட அமெரிக்கா கைவிடுகிறது என்றால், மற்ற மக்களின் கதி என்ன என்பதைக் கேள்வியின்றி புரிந்து கொள்ளலாம்.
புளோரிடாவின் பெனெல்லா பார்க்கில் வாழும் 44 வயது டல்லாஸ் கார்ட்டர் மனைவியைப் பிரிந்து குழந்தைகளோடு வாழும் ஒரு ஊனமுற்றவராவார். பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்து, கடனில் மூழ்கி இறுதியில் தனது வீட்டையும் பறிகொடுக்கும் நிலையில் போலீசுக்கு தொலைபேசி மூலம் பேசிய கார்ட்டர் தான் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடன் விரைந்த போலீசு அவரைச் சரணடையுமாறு கேட்டது. பூட்டிய வீட்டில் துப்பாக்கியுடன் இருந்த கார்ட்டர் அதை மறுத்ததால் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நமது ஊரில் போராடும் மக்களை போலீசு சுட்டுக் கொல்கிறது. இதுவே அமெரிக்காவில் தனித்தனி வீடுகளில் நடக்கிறது. கடனை அடைக்க முடியாத அமெரிக்க மக்கள் இப்படித்தான் தமது உயிரைக் கொடுத்து விடுதலை அடைகின்றனர். அமெரிக்க வாழ்க்கையில் ஒரு தனிமனிதனது விடுதலை இப்படித்தான் இருக்க முடியும் போல.
ஜூலை 23ஆம் தேதி மாசூசெட்ஸ் மாநிலத்தின் டான்டன் பகுதியைச் சேர்ந்த காரலீன் என்ற பெண்மணியின் வீடு ஜப்தி செய்யப்பட்டு ஏலமிட இருக்கிறது. அதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னர் அந்த அடமான நிறுவனத்திற்கு பேக்ஸ் அனுப்பிய காரலீன் அதில் தனது வீடு ஜப்தி செய்யப்படும் முன்பு தான் இறந்து விடுவேனென குறிப்பிடுகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது கணவன் மற்றும் மகனுடன் அந்த நிறுவனம் இணக்கமான உறவு வைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடுகிறார் காரலீன். காரணம் அவர் மறைவுக்குப் பின் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை வைத்து தனது கணவன் வீட்டை மீட்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் நெஞ்சை உருக்கும் வண்ணம் எழுதும் காரலீன் சொன்னபடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப் பெண்மணியின் கணவரான ஜான் ""எங்களது நிதி விவகாரத்தை எனது மனைவிதான் கவனித்து வந்தாள், வீடு ஜப்தி செய்யப்படப்போவது கூட எனக்குத் தெரியாது, அதற்கான எந்த அடையாளத்தையும் அவள் காட்டிக் கொண்டதில்லை'' என்று கதறி அழுகிறார். இரக்கமற்ற முதலாளித்து சமூகத்தின் முன் ஒரு பேதைப் பெண் வேறு எப்படிப் போராடியிருக்கமுடியும்? வீட்டிற்கு விலையாக தனது உயிரைக் கொடுத்த காரலீன் அமெரிக்காவின் விதிவிலக்கல்ல, இப்படித்தான் பலர் தங்களது கடனுக்கு வழி தேடுகிறார்கள்.
மிக்சிகனின் பே சிட்டியில் வாழும் 56 வயது டேவிட்டும் அவரது மனைவி ஷெரானும் வீட்டை இழந்து தாங்கள் திவாலானவர்கள் என்பதற்காக மனு செய்திருக்கிறார்கள். அந்த மனுவில் அவர்கள் முறைப்படிச் செய்யவேண்டிய நடைமுறைகளை செய்யவில்லை என்பதால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த டேவிட் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி விட்டு தனது மனைவியை சமையல் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, வீட்டிற்கு தீவைத்து எரித்த பிறகு மனைவியின் அருகில் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்கிறார். தங்களைத் திவாலானவர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் அமெரிக்க நிறுவனங்கள் அடைந்த ஆதாயங்களுக்கு மத்தியில் தன்னை திவாலானவன் என்று அறிவிக்க முடியாத அமெரிக்க குடிமகனின் கோரமான முடிவு இது. மின்னசோட்டாவின் ரோஸ்விலி பகுதியில் வாழும் சில்வியா சிஃபர்மேன் எனும் பெண்மணி இரண்டு சீனப்பெண் குழந்தைகளை தத்து எடுத்துவளர்க்கிறார். அவர்களுக்கு இப்போது வயது 11. தனது மகள்களின் வளர்ச்சியில் பூரிப்படையும் அந்தத் தாய் அதை இணையத்தில் அவரது வலைப்பூவில் பதிவு செய்கிறார். ஆனால் அமெரிக்காவில் எல்லோரையும் தாக்கிய அந்தச் சுனாமியில் தனது வேலையை இழந்து கடனில் மூழ்கிய சில்வியா தான் பாசமாக வளர்த்த இருமகள்களையும் வேறுவழியின்றி கத்தியால் குத்துகிறார். ஒருமகள் ஆபத்திலிருந்து தப்பித்துவிட மற்றொரு மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க சித்த பிரமையடைந்த சில்வியா போலீசு காவலில் இருக்கிறார். இனிமேல் தனது மகள்கள் வாழ்வதற்குத் தேவையான எவற்றையும் அளிக்கமுடியாது என்று பரிதவித்த ஒரு தாயின் கதையிது.
லாஸ் ஏஞ்செல்சில் கார்த்திக் ராஜாராம் தனது குடும்பத்தையும் தன்னையும் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் முன்னால் அடி போல்க் எனும் 90 வயது மூதாட்டி ஜப்தி செய்யப்பட்ட தனது வீட்டிலிருந்து தன்னை தூக்கி எறிவதை எப்படி நிறுத்துவது என்று யோசித்தார். அவருக்கு இருந்த ஒரே வழி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனாலும் முதுமை காரணமாக சரியாக சுடமுடியாததால் காயமடைந்த அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் ஊடகங்களால் பேசப்பட்டதால் இந்த வீட்டை அடமானத்திற்கு எடுத்திருந்த பென்னி மா நிறுவனம் "பெரிய மனதுடன்' அந்த வீட்டை அந்த மூதாட்டிக்கே திரும்ப ஒப்படைத்து விட்டது. பலவருடங்களாக வாழ்ந்த வீட்டை விட்டு ஒரு 90 வயது மூதாட்டி தூக்கி எறியப்பட இருக்கிறாள் என்றால் அமெரிக்க சமூகத்தின் இரக்கத்தை என்னவென்று அழைப்பது?
···
வேலையின்மையும், கடனும், வீட்டை இழப்பதும் அமெரிக்க சமூகத்தைக் கரையான் போல அரித்து வருகின்றன. மற்ற துன்பங்களையெல்லாம் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளும் அமெரிக்க மக்கள் வீட்டை விட்டுத் துரத்தப்படுவதை மட்டும் பாரதூரமாக நிவாரணமற்ற வலியாக உணருகிறார்கள். இந்தக் கதைகள் அமெரிக்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரம் மட்டுமே. மேலும் அமெரிக்க ஊடகங்களால்கூட பேசப்படாத கதைகளும் கூட. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு அப்புறப்படுத்தும் இந்த அநீதியை எதிர்த்துக் கொலைகளும் தற்கொலைகளும் சடங்காய் நடந்து வருகின்றன. பல இடங்களில் மக்கள் சிறு அமைப்புகளாக அணிதிரண்டு இந்த ஜப்தி நடவடிக்கையை தடுக்க நினைத்தாலும் அவை வெற்றிபெறவில்லை. முதலாளிகளின் உரிமையை நிலை நாட்ட வரும் போலீசு அவர்களைக் கைது செய்து சொத்துடைமையின் அதிகாரத்தை நிலை நாட்டுகிறது.
உலகமயமாக்கத்தால் விவசாயம் சீர்குலைந்து வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் இந்திய விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்கிறார்கள். வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை என்ற மான உணர்ச்சியுடன் வாழும் இந்த விவசாயிகளின் பண்பு அமெரிக்க ஏழைகளுக்கும் இருக்கிறது. அங்கே துப்பாக்கிகள் மலிவாகக் கிடைப்பதால் பூச்சி மருந்துக்கு தேவையில்லை. அப்படித்தான் பலரது வாழ்வை வெடிமருந்துகள் தீர்த்து வைக்கின்றன. வீட்டின் மேல் பெற்ற கடனை அடைத்தும், அடைக்கமுடியாத போது வீட்டை விட்டு வெளியேறி அல்லது தனது உயிரைக் கொடுத்தாவது ஆயுள் காப்பீடு மூலம் வாங்கிய கடனை கட்ட நினைக்கும் இந்த மக்களின் நாட்டில்தான் முதலாளிகளின் சூதாட்ட நட்டத்திற்கு அமெரிக்க அரசு அள்ளிக் கொடுக்கிறது. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை கேள்விப் படும்போது அமெரிக்கா சொர்க்கபுரி அல்ல என்பது எல்லோருக்கும் புரியவரும். ஏழை நாடுகளை சுரண்டிக்கொழுக்கும் அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டு மக்களையும் விட்டு வைப்பதில்லை என்பதிலிருந்து உலகமயக் கொள்கை என்பது மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல அமெரிக்காவையும் அரித்துத் தின்னும் விஷ ஜந்து என்பதை ஏற்றுக் கொள்வதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா? · இளநம்பி